
கோலாலம்பூர் நவம்பர்- 5,
இன்று இரவு மலேசியர்கள் வானில் அரிய காட்சியொன்றைக் காணும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளனர்.
ஆண்டின் மிகப்பெரிய Supermoon மற்றும் Southern Taurid விண்மீன் மழை ஒரே நேரத்தில் நிகழவுள்ளதென்று மலேசிய விண்வெளி நிறுவனம் (MYSA) தெரிவித்தது.
இன்று இரவு 9.19 மணிக்கு நிலா தனது முழு (Full Moon) நிலையை அடையும் பொழுது, பூமிக்கு மிக அருகிலான சுமார் 356,832 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். அதனால் அது வழக்கத்தை விட பெரிய மற்றும் பிரகாசமான தோற்றத்தில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 23 முதல் நவம்பர் 20 வரை நிகழும் விண்மீன் மழை இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை தொடர்ந்து பெய்யுமென்பதால் ஒரு மணிநேரத்திற்கு சுமார் ஐந்து விண்மீன்கள் வரை கண்களுக்கு தெரியும் வாய்ப்பு உண்டு.
இந்நிகழ்வை சிறப்பு கருவிகள் இன்றி நேரடியாக காண முடியும் என MYSA அறிவித்துள்ளது. எனினும் தொலைநோக்கி போன்ற கருவிகள் பயன்படுத்தப்படின் அந்த அரிய காட்சியை மேலும் தெளிவாக நாம் காணலாம்.



