இன்று தொடங்கி 3.1 மில்லியன் பேருக்கு SARA மாதாந்திர உதவி தொகை – நிதி அமைச்சு

கோலாலம்பூர், ஜனவரி 16 -Sumbangan Asas Rahmah எனப்படும் SARA திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்கள் இன்று முதல் மாதாந்திர உதவித் தொகையைப் பெறத் தொடங்கியுள்ளனர் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 3.1 மில்லியன் பேர் இந்த உதவியின் பயனாளர்களாக உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு முகநூலில் வெளியிட்ட தகவலின்படி, தகுதியைப் பொறுத்து ஒருவருக்கு மாதம் அதிகபட்சமாக 100 ரிங்கிட் வரை உதவி வழங்கப்படும் என்றும் இந்த உதவி தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
21 முதல் 59 வயதுக்குட்பட்ட, மாத வருமானம் 2,500 ரிங்கிட் மற்றும் அதற்கு கீழ் உள்ள தனிநபர்கள் இந்த SARA மாதாந்திர உதவிக்கு தகுதியுடையவர்கள். இதில், அதே வருமான வரம்பில் உள்ளவர்களுக்கு 50 ரிங்கிட் வழங்கப்படும் நிலையில், eKasih பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 100 ரிங்கிட் வழங்கப்படும். இந்த உதவி வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல், நேரடியாக பெறுநர்களின் MyKad-க்கு கிரெடிட் செய்யப்படுகிறது.
பெறுநர்கள், சூப்பர் மார்க்கெட் அல்லது கூட்டாளர் கடைகளில் MyKad பயன்படுத்தி, கொள்முதல் செய்வதற்கு முன் இருப்புத் தொகையை எளிதில் சரிபார்க்கலாம். கவுன்டரில் தெரிவிக்கப்பட்ட பிறகு, இருப்புத் தொகை திரை அல்லது ரசீதில் காட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Sumbangan Tunai Rahmah அதாவது STR திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது mykasih.com.my தளத்தின் மூலம் தகுதி நிலை மற்றும் உதவி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். கூடுதல் விளக்கம் தேவைப்படுவோர் STR உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அலுவலகத்தை அணுகலாம்.



