Latestமலேசியா

இன-மத வாத வெறித்தனம் சாதாரண மக்களிடம் இல்லை; தலைத் தூக்க காரணமே cyber troopersகள்தான் – சித்தி காசிம் சாடல்

கோலாலம்பூர், ஏப்ரல்-8 -குறிப்பாக சமூக ஊடங்களில் அதன் தாக்கம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

இதற்கு காரணம் எல்லாரும் நினைப்பது போல் பொது மக்கள் அல்ல; மாறாக cyber troopers எனப்படும் இணைய துருப்புகளே.

சமூக ஆர்வலர் என்ற வகையில் தான் கண்காணித்த வரைக்கும் இந்த _cyber troopers-களால் தான் இத்தனையும் நிகழ்வதாக வணக்கம் மலேசியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் நாடறிந்த வழக்கறிஞருமான சித்தி காசிம் கூறினார்.

இந்த _cyber troopers-கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளால் பணத்திற்கு பணியமர்த்தப்பட்டு, எதிரிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

எதிரிகளின் நம்பகத்தன்மைக்குக் களங்கம் விளைவித்து, அரசியலில் அவர்களை செல்லாக்காசாக்குவதே இவர்களின் வேலை.

ஆனால், அவ்விலக்கை அடைய, இன – மத அம்சங்களை அவர்கள் ஆயுதமாகக் கையில் எடுக்கின்றனர்; liberalisme எனப்படும் தாராளமயக் கொள்கை, LGBTQ கலாச்சாரம், இஸ்லாத்துக்கு எதிரான அம்சங்கள் போன்றவற்றை அவர்கள் தூண்டி விடுகின்றனர்.

இதனால் சமூக ஊடகமே போர்க்களமாகி விடுவதாக சித்தி காசிம் கூறினார்.

இது போன்ற சூழல்களில், மக்களுக்கு சரியான தகவல்கள் உண்மையாகப் போய் சேராததும் நிலைமையை மோசமாக்கிறது; இது, அதிகாரத்திலிருக்கும் அரசாங்கத்தின் தவறே என்றார் அவர்.

சமயவாதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரும், சமூக ஊடகங்களில் தங்கள் பங்குக்கு இனவாத புகைச்சலைத் தூண்டி விடுகின்றனர்.

அவர்கள் மீது அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், அதில் அரசாங்கம் பட்டும் படாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது; அப்படியொரு கண்ணோட்டம் ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணம் என சித்தி காசிம் தெளிவுப்படுத்தினார்.

இவ்வேளையில், சமூக ஊடகத்தின் தாக்கம் குறித்தும் பலர் அறிவதில்லை.

அதனால், தாம் சொல்ல வரும் ஆலோசனை என்னவென்றால், உங்களால் எல்லைமீறிய விமர்சனங்களையோ வெறுப்புணர்வை அல்லது சினமூட்டும் வகையிலான கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியா விட்டால், சமூக ஊடகப் பக்கம் தலைக்காட்டாமலிருப்பதே நல்லது.

அவற்றை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த சமூக ஊடங்களால் தமக்கு வராத சவால்களா என சிரித்துக் கொண்டே கூறிய சித்தி காசிம், அவற்றை தாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டதாக கூறினார்.

“இஸ்லாத்துக்கு எதிரானவள், ஒரே பாலினத் திருமணத்தை ஆதரிப்பவள்” என்றே எத்தனையோ முத்திரைகள் குத்தப்பட்டும், அவற்றுக்கெல்லாம் பயந்து தாம் யாரிடமும் மண்டியிடவில்லை என பெருமிதத்தோடு சித்தி காசிம் கூறினார்.

சமூக ஊடகங்களில் எல்லை மீறிய பதிவுகளாலும் அவதூறுகளாலும் நாடும் நாடு மக்களும் பிளவுப்படாமலிருக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!