சுங்கை பிளேந்தோங் தமிழ்ப் பள்ளியின் குடிநீர் பிரச்சனைனைக்கு விடிவு; ரவின் குமார் RM30,000 மானியம்

பாசீர் கூடாங், செப்டம்பர்-30 – ஜோகூர், பாசீர் கூடாங் மாவட்டத்தில் 25 மாணவர்கள், 8 ஆசிரியர்களுடன் இயங்கி வரும் பள்ளி தான் – சுங்கை பிளேந்தோங் தோட்டத் தமிழ்ப் பள்ளியாகும்.
இப்பள்ளியின் தீராத சிக்கலாக இத்தனை காலமும் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.
18 ஆண்டுகளாக நிலத்தடி இயந்திரத்தின் வழி குடிநீர் பெற்று வந்த காலமும் உண்டு.
பிறகு தோட்டப் புறத்திலிருந்து நீர் கையிருப்பு பெறப்பட்டது; ஆனால் அது குடிப்பதற்கு அல்லாமல் மற்றத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினரும் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமியின் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டுச் செல்லப்பட்டது.
மாணவர்களின் மீதான அக்கறையில் ரவின் குமார் இன்று பள்ளிக்கு நேரில் சென்று நிலவரத்தைக் கண்டார்.
குடிநீர் பிரச்னைக்குத் தீர்வாக 30,000 ரிங்கிட் மான்யத்திற்கான உத்தரவுக் கடிதத்தையும் அவர் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
இந்த அடிப்படைப் பிரச்னையால் அவதியுற்று வந்த மாணவர்களின் அவல நிலைக்கு ரவின் குமாரின் நிதியுதவி விடியலைத் தந்துள்ளது.