
மலாக்கா, டிசம்பர் 19-உடம்புபிடி மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் இயங்கும் நேரத்தை நீட்டிக்க எந்தத் திட்டமும் இல்லை என, மலாக்கா மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
அம்மையங்களுக்கு அதிகாலை 2 மணி வரை சேவையை நீட்டிக்க அனுமதி வழங்கப்படலாம் என சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவல் வெறும் வதந்தியே என அது குறிப்பிட்டது.
இது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பொது மக்களிடையே தேவையற்ற கவலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் என, வீடமைப்பு – ஊராட்சி உள்ளிட்ட துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Rais Yasin கூறினார்.
தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, உரிமங்கள் மற்றும் சிறப்பு அனுமதி கோரிக்கைகள் case-by-case அதாவது தனித்தனிச் சூழலை பொருத்தே சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் மாநில நிர்வாக மன்றங்கள் மூலம் பரிசீலிக்கப்படுகின்றன.
எனவே, அம்மையங்கள் இயங்கும் நேரத்தை ஒரேடியாக மாற்றும் எந்த புதிய கொள்கையும் இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.



