
லண்டன், டிசம்பர்-13, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் உடல்நிலை குறித்து முன்னேற்றகரமான செய்தி வெளியாகியுள்ளது.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை அடுத்தாண்டு குறைக்கப்படவுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சார்ல்ஸின் சிகிச்சை தற்போது முன்னெச்சரிக்கை கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது.
சிகிச்சைக்கு அவரின் உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பதால், இனி தீவிர சிகிச்சைகள் தேவையில்லை என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மன்னர் சார்ல்ஸ், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மிக முக்கியம் என வலியுறுத்தினார்.
பொது மக்கள் தவறாமல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சார்ல்ஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்ச்சியான சிகிச்சை மூலம் தற்போது அவரது உடல்நிலை சீராகி வருவது பிரிட்டன் மக்களை நிம்மதியடைச் செய்துள்ளது.



