உண்மையிலேயே அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்ல: 7 வெளிநாட்டவர்கள் நுழைவை மறுத்த AKPS

புக்கிட் காயூ ஹீத்தாம், டிசம்பர் 12 – நேற்று, புக்கிட் காயூ ஹீத்தாமில் (Bukit Kayu Hitam) மலேசிய நுழைவு விதிகளைப் பின்பற்றாமல் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட ஏழு வெளிநாட்டவர்கள் நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையமான AKPS அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
அவர்களில் ஐவர் இந்தியர்கள் என்றும் மற்ற இருவர் தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.
புக்கிட் காயூ ஹீத்தாம் ICQS மையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவர்களிடம் சுற்றுலா முடிந்து திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டுகள் ஏதும் இல்லாததால் அவர்கள் உண்மையான சுற்றுலாப்பயணிகள் அல்ல என்பது கண்டறியப்பட்டது.
மேலும் அவர்கள் சரியான நோக்கம் ஏதும் இல்லாமல் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
குடிநுழைவுச் சட்டத்தின்படி, அந்த எழுவரும் அதே வழியாகத் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் நுழைவுத் தளங்கள் பாதுகாப்பாகவும் சட்டப்படி இயங்கவும் தொடர்ந்து இத்தகைய கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் என்று AKPS அறிவித்துள்ளது.



