
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 1959-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம், MyKad அடையாள அட்டைகளின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க 10 கைவிரல் ரேகை பதிவுகள், கருவிழி மற்றும் முக ஸ்கேன்கள் உள்ளிட்ட முழுமையான biometrics தரவுப் பதிவை அறிமுகப்படுத்தும்.
தற்போதைய தேவைகள் மற்றும் மலேசியர்களின் தனிப்பட்ட அடையாளத் தகவல்களின் பாதுகாப்பு நிலை மற்றும் இரகசியத்தன்மையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா (Shamsul Anuar Nasarah) அவ்வாறு கூறினார்.
புதிய, மிகவும் அதிநவீன கட்டமைப்புடன் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்துடன் இந்த மேம்பாடுகள் ஒத்துப்போகின்றன என, அச்சட்டத் திருத்தம் மீதான விவாதத்தை மக்களவையில் முடித்து வைத்து பேசிய போது அவர் சொன்னார்.
அச்சட்டத் திருத்த மசோதா பின்னர் பெரும்பான்மையான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
2021 முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் வரை JPN எனப்படும் தேசிய பதிவுத் துறையின் கீழ் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 795 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த எண்ணிக்கையில், 326 நபர்கள் மீது போலி அடையாள அட்டை வைத்திருந்ததற்காகவும், வேறொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதற்காகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலைமை நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பு முறையை வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சு, JPN-னுடன் இணைந்து 2012 முதல் பயன்பாட்டில் உள்ள தற்போதைய MyKad அட்டையை மாற்றுவதற்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தலைமுறை அடையாள அட்டையை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்நடவடிக்கை போலி மற்றும் தவறான பயன்பாடு பிரச்னையைத் தடுப்பது மட்டுமல்லாமல், நாட்டின் அடையாள அமைப்பு அண்மையத் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதிச் செய்யும் என்றார் அவர்.