எதிர்காலத்தை முடிவு செய்யுங்கள், இல்லையென்றால் தேசிய முன்னணியே முடிவெடுக்க வேண்டி வரும்; ம.இ.காவுக்கு சாஹிட் எச்சரிக்கை

பட்டவொர்த், டிசம்பர் 21-தேசிய முன்னணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ம.இ.கா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறும் பட்சத்தில், தேசிய முன்னணியே அது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டி வரும்.
அக்கூட்டணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி இவ்வாறு எச்சரித்துள்ளார்.
_“கட்சியின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுப் பேரவையே கட்சித் தலைமைக்கு கொடுத்தப் பிறகும், அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை என்றால் நாங்களே முடிவெடுக்கிறோம்” என்றுள்ளார் அவர்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவது தொடர்பில் ம.இ.கா தலைமைத்துவம் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் விண்ணப்பக் கடிதமொன்று உலா வருகிறது.
இது தேசிய முன்னணிக்கான ம.இ.காவின் விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்புவதாகக் கூறிய சாஹிட், இங்கொன்றும் அங்கொன்றுமாக கால் வைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது.
இங்கு இருப்பதா இல்லையா என்பதை அக்கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டும்;
ஒரு நிச்சயமற்ற சூழலை தொடர முடியாது என்றார் அவர்.
இது மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவுக்கும் பொருந்தும்.
இதனிடையே அம்னோவுடன், அவ்விரு கட்சிகளுமே 70 ஆண்டு கால பந்தத்தைக் கொண்டுள்ளன என்பதை சாஹிட் நினைவுறுத்தினார்.
தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனில் ம.இ.கா இணைய வேண்டுமென கடந்த மாத பொதுப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கும் மத்திய செயலவைக்கும் பேராளர்கள் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் விரைவிலேயே ம.இ.கா மத்திய செயலவை இறுதி முடிவை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Zahid , MIC: Decide now, or BN will decide future for you



