
கோலாலாம்பூர், ஜூலை-23- ஓராண்டுக்கு முன்னர் சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரியை இணையப் பகடிவதை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் தான் கபாலி எனும் சத்திஷ்குமார்.
8 மாதங்கள் சிறைவாசம் முடிந்து கடந்த மார்ச் மாதம் இவர் காஜாங் சிறையிலிருந்து விடுதலையானார்.
சிறைவாசம் கொடுத்த படிப்பினையால் தவற்றை உணர்ந்து, மெல்ல தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் 45 வயது கபாலிக்கு, இப்போது நிம்மதியில்லை.
எந்தக் குற்றத்திற்காக அவர் சிறை சென்றாரோ, இப்போது அதே குற்றம் இவர விடாமல் துரத்துகிறது.
கடந்த கால தவற்றை சுட்டிக் காட்டி இப்போது இவரை எல்லை மீறி இணையப் பகடிவதை செய்கின்றனர்.
தாம் மட்டுமல்லாமல் குடும்பமும் இதனால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக, 3 குழந்தைகளுக்குத் தந்தையான கபாலி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்..
இது குறித்து போலீஸில் புகார் செய்த கபாலி, நிலைமை மோசமாகி வரவே தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சிலையும் நேரில் சந்தித்து தனது நிலையை விளக்கிக் கூறினார்.
ஆறுதல் கூறி அனுப்பி வைத்த ஃபாஹ்மி, அடுத்த தடவை தக்க ஆதாரங்களுடன் வருமாறும் கேட்டுக் கொண்டார்.
“தவறு செய்வது மனித இயல்பு; அவ்வகையில் செய்த தவற்றுக்காக சிறைத் தண்டனையும் அனுபவித்து விட்டேன்; திருந்தி வாழ முற்படும் நேரத்தில், இதுபோன்ற செயல்களால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இணையப் பகடிவதை செய்தார் என அன்று அவரை நாம் குறைக்கூறினோம்; இன்று அதே தவற்றை நாம் செய்வது மட்டும் எப்படி நியாயமாகும் என அவர் வினவியுள்ளார்.