
கோலாலம்பூர், டிசம்பர்-22 – ஜோகூர், கங்கார் பூலாயில் உள்ள மலையாலும் முருகன் கோவில் இடிக்கப்பட்டது குறித்து, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா கடும் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளது.
கோவில் இடிப்பு சம்பவங்கள் புதியவை அல்ல, ஆனால் அண்மையக் காலமாக அவை அதிகரித்து
பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறினார்.
சில நேரங்களில் கோவில்கள் தவறான இடங்களில் கட்டப்பட்டிருக்கலாம்,
ஆனால் அவற்றை இடிக்கும் முன் அதிகாரிகள் விவேகமாக செயல்பட வேண்டும்.
மாற்று வழிகளைக் கண்டறிய ஆலய நிர்வாகங்களுக்கு
ஆலோசனை, போதிய நேரம் மற்றும் வாய்ப்பு வழங்க வேண்டும் என சிவகுமார் வலியுறுத்தினார்.
இந்த மலையாலும் முருகன் கோயில் இடிப்பு சம்பவத்தில் தெய்வ சிலைகள் உடைக்கப்பட்டு,
அவை உரிய மத சடங்குகளின் படி மாற்றப்படவில்லை என்பது மிகுந்த கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமுலாக்க அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம்
நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும்,
மத ஒற்றுமை காக்க மனிதநேயமான அணுகுமுறை அவசியம் என்றும் மஹிமா வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், ஆனால் கோவில்கள் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள்
உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்” என அறிக்கை வாயிலாக சிவகுமார் கேட்டுக் கொண்டார்.



