Latestமலேசியா

கட்சியின் நலன் கருதி ம.இ.கா விவேகமான முடிவை எடுக்கும் – அரசியல் ஆய்வாளர் டத்தோ பெரியசாமி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – “இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த எந்த அரசியல் கட்சியுடனும் பேச தயாராக இருக்கிறோம்” என்று ம.இ.கா.வின் தேசியத்தலைவர் அறிவித்தது பெரும்பாலான இந்திய சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒற்றுமைக் கூட்டணி அரசை அமைப்பதற்கு பாரிசான் நேஷனல் உதவிக்கரம் நீட்டியபோது, ம.இ.கா.வும் ஆதரவாக இருந்தது.

இருப்பினும் ம.இ.கா.வுக்கு ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த இடமும் வழங்கப்படவில்லை என்பது ம.இ.கா. மத்தியிலே பெரும் அதிருப்தி உணர்வை ஏற்படுத்தியது.

இதனிடையே, ம.இ.கா. தேசியத்தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன், கட்சியின் எதிர்கால நலன் கருதி எந்தக் கூட்டணியுடனும் பேச்சு வார்த்தை நடத்த ம.இ.கா. தயாராக இருப்பதாக அறிவித்தது நாடறியும்.

இதன் அடிப்படையில் ம.இ.கா. பாரிசான் நேஷனலிலிருந்து விலகலாம் அல்லது பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் சேரலாம் எனும் ஊகங்கள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், ம.இ.கா.வின் எதிர்காலம் பாரிசான் நேஷனல் கூட்டணியுடன் இருக்கும்போதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

தற்போது, தான் ஸ்ரீ SA. விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா மிக வலுவான கட்சியாக உருவாகி வருகிறது.

14-ஆம் மற்றும் 15-ஆம் பொதுத் தேர்தல்களில், மலாய் வாக்காளர்கள் பாரிசான் நேஷனலிலிருந்து மாற்றுக் கட்சிகளுக்கு மாறியதால், ம.இ.கா.வுக்கு போதிய மலாய் வாக்காளர்களின் ஆதரவு குறைந்து தேர்தலில் ம.இ.கா.வின் வெற்றி வாய்ப்புகள் குறைந்தது.

இந்த நிலையில், ம.இ.கா.வின் எதிர்கால நலன் கருதி ம.இ.கா.வின் தலைமைத்துவம் பல வியூகங்களை எடுக்கும் நேரம் வந்து விட்டது. இதன் அடிப்படையில் ம.இ.கா. தொடர்ந்து பரிசான் நேசனல் கூட்டணியில் இருப்பதா? அல்லது PN கூட்டணியில் சேருவதா? அல்லது பக்‌காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியில் சேருவதா? என்று முடிவெடுக்கும் தருணம் வந்துவிட்டது.

15-ஆம் பொதுத் தேர்தலின் முடிவுகளின்படி, PN-க்கு, PAS மற்றும் பெர்சாத்து கட்சிகளின் கீழ், பெரும்பாலான மலாய் வாக்காளர்களின் வலுவான ஆதரவு உள்ளது.

அதேவேளை, PH-க்கு, DAP கட்சியின் கீழ் பெரும்பாலான சீன வாக்காளர்களின் ஆதரவும், நகரப் பகுதிகளில் சில மலாய் வாக்காளர்களின் ஆதரவும் உள்ளது.

இச்சூழ்நிலையில், கெடா மாநில ம.இ.கா.வின் பேராளர் மாநாட்டில் கெடா மாநில ம.இ.கா. PN. கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எவ்வாறாயினும், ம.இ.கா.யின் 79-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில், ம.இ.கா.வின் எதிர்கால பாதையைப் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கு முன்னர் பல சவால்களை ம.இ.கா. விவேகத்துடன் எதிர்கொண்டுள்ளது.

ம.இ.கா. தலைமைத்துவமும் பேராளர்களும் சரியான, விவேகமான அரசியல் முடிவுகளை எடுக்கும் அனுபவமும் அறிவும் துணிவும் உள்ளவர்கள். இதன் அடிப்படையில் கட்சியின் எதிர்கால நலன் கருதி ம.இ.கா. ஒரு சிறந்த, விவேகமான எதிர்கால பாதையை முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம் என நாடறிந்த அரசியல் சமூக ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி கருத்துரைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!