
புத்ராஜெயா, நவம்பர்-15, கம்போடியாவும் தாய்லாந்தும் தங்கள் எல்லைத் தகராறை தீர்க்கும் கடப்பாட்டில் உறுதியாக உள்ளன.
வன்முறையால் அல்லாமல் தூதரக வழியாகப் பிரச்னையைப் பேசித் தீர்க்க அவை விரும்புகின்றன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புடனான நேற்றைய தொலைப்பேசி உரையாடலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.
ட்ரம்பின் அண்மைய மலேசிய வருகையின் போது இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
எனினும் தாய்லாந்து – கம்போடிய எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது.
எல்லையில் கன்னிவெடி சம்பவத்தை மேற்கோள் காட்டி, தாய்லாந்து, அமெரிக்க ஆதரவு அமைதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதனால் ஆசியான் வட்டார அமைதி மீண்டும் கேள்விக்குறியான நிலையில், 2025 ஆசியான் தலைவருமான அன்வார் ட்ரம்புடன் பேசியுள்ளார்.
மலேசியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ‘கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம்’ இன்னமும் நடைமுறையில் இருப்பதையும் அன்வார் அதன் போது உறுதிப்படுத்தினார்.
கம்போடிய – தாய்லாந்து எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த மலேசியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



