
காசா, செப்டம்பர்-6 – காசா நகரில் ஹமாஸ் தரப்பு பயன்படுத்தி வரும் வானுயர் கட்டடங்களைக் குறி வைக்கப்போவதாக மிரட்டியிருந்த இஸ்ரேலிய இராணுவம், சொல்லியபடியே உயரமான ஒரு கோபுரத்தை வெள்ளிக்கிழமை இடித்து தரைமட்டமாக்கியது.
காசாவின் மிகப்பெரிய நகரத்தை கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஹமாஸ் உயரமான கட்டடங்களில் பதுங்கியவாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது
இந்நிலையில், நேற்றைய அத்தாக்குதலில் பொது மக்கள் பாதிக்கப்படாதபடி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்ட பிறகே கட்டடம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் கூறிக் கொண்டது.
பெரும் புகை மற்றும் புழுதிக்கு மத்தியில் கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின.
இதுவரை காசா நகரின் 40% பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், மேலும் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்கள் சுமார் ஒரு மில்லியன் மக்களை தெற்குப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாண்டுக்கும் மேலாக நீடித்து வரும் போரை நிறுத்த வேண்டும் என உலகம் முழுவதும் அழுத்தம் அதிகரித்து வருகின்ற போதிலும், இஸ்ரேல் கேட்பதாகத் தெரியவில்லை.