
ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 9 – கனடாவைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஆடவர் ஒருவரின் காதல் வலையில் சிக்கிய 53 வயது பெண் ஒருவர் RM2.3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
கடந்தாண்டு, பாதிக்கப்பட்டவரின் அத்தை, கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சந்தேக நபரைச் சந்தித்து, அவரை பாதிக்கப்பட்டவருடன் திருமணம் செய்து வைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் கூறினார்.
பின்பு சந்தேக நபர் ஓமானில் மின்சார கட்டமைப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், மூலப்பொருட்களை வாங்க நிதி மாற்ற உதவி தேவைப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவரிடம் கூறினார்.
இந்நிலையில் அந்நபரின் வார்த்தைகளை நம்பி, சந்தேக நபரின் வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு பரிவர்தனைகளின் மூலம் 2.3 மில்லியன் ரிங்கிட் வரை பணம் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அந்நபரின் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும், மக்கள் ஆன்லைன் உறவுகளில் எச்சரிக்கையுடன் இருந்து, உணர்ச்சிகளையும் நம்பிக்கையையும் பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு இரையாகாமல் இருக்குமாறு அல்வி வலியுறுத்தினார்.