
அந்தமான், செப்டம்பர்-26,
இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவிலேயே இன்னமும் செயல்பாட்டில் இருக்கும் ஒரே எரிமலை தற்போது வெடித்துச் சிதறியுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் ‘பாரன்’ (Barren) தீவில் உள்ள இந்த எரிமலை நெருப்பைக் கக்கும் காட்சிகளை, இந்தியக் கடற்படை வீடியோவில் பதிவுச் செய்துள்ளது.
இந்த வெடிப்பினால் தீப்பிழம்புகள், சாம்பல் மற்றும் புகையை அது வெளியேற்றி வருகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடின்றி இருந்த இந்த ‘பாரன்’ தீவு எரிமலை, 1991-ஆம் ஆண்டு வெடித்தபின், இப்போது மீண்டும் சலனம் காட்டி வருகிறது.
இந்த மாதம் மட்டுமே அது 2 முறை வெடித்துள்ளது.
ஆகக்கடைசியாக செப்டம்பர் 20 அன்று ஏற்பட்ட வெடிப்புக்கு முன், அதே பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெடிப்புகள் சிறியதாக இருந்தாலும், அடிநிலச் சலனங்களை அவை சுட்டிக்காட்டக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2004 சுனாமியை உருவாக்கிய பிளவுக்கோடு (fault line) அருகே இந்த எரிமலை அமைந்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ‘பாரன்’ தீவு மக்கள் வசிப்பதில்லை.
என்றாலும், விஞ்ஞானிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மிக உணர்வான இப்பகுதியில் சிறிய சலனங்களையும் அலட்சியம் செய்ய முடியாது என அவர்கள் எச்சரிக்கின்றனர்.