
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-27,
2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குரு தட்சணைத் திட்டத்தில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அவர்களுக்கு STPM தேர்வுக்கான உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சரின் மூத்த அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.
அவர்களில் 250 மாணவர்கள் வெற்றிகரமாக பொது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.
துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆதரவோடு, Johor Self-Help Association
மற்றும் Social I-Tenaga Association இரண்டும் அத்திட்டத்தை நிர்வகித்து வருகின்றன.
STPM தேர்வுக்கு இந்திய மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், இயங்கலை வாயிலாக அத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியச் சமூகம் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருப்பவர்களில் முக்கியமானவர் ரமணன்; கல்வியில் ஒருவரும் பின்தங்கி விடக் கூடாது என்பதே அவரின் நோக்கம்.
இவ்வாண்டு மட்டும் பேங்க் ராக்யாட் மற்றும் KUSKOP அமைச்சின் கீழுள்ள பிற நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, 300 மிகச் சிறந்த மாணவர்களுக்கு 200,000 ரிங்கிட் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையும் வெகுமதியும் வழங்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சாதனையாளர் சந்திப்பு’ எனும் நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில், அன்புமணி அவ்வாறு கூறினார்.
STPM தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற 100-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அதில் கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
டத்தோ அன்புமணி தமது சொந்த நன்கொடையாக 10,000 ரிங்கிட்டை அந்நிகழ்வுக்கு வழங்கியிருந்தார்.
இந்த குரு தட்சணை த் திட்டத்தின் நன்மைகள் குறித்து ஏற்பாட்டாளர்கள் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
ஊக்கத்தொகைப் பெற்ற மாணவர்களில் சிலர் அது குறித்த மகிழ்ச்சியையும் தங்களின் வெற்றிக்கான இரகசியத்தையும் கூறினர்.
வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜன், Johor Self-Help Association தலைவர் கிருஷ்ணசாமி முனியாண்டி உள்ளிட்டோர் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.