
சுங்கை பட்டாணி , ஜன 13 – Jalan Alor Setar – Butterworth சாலையின் 48.2 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் ஒரு காரில் மோதி மற்றொரு காரின் மீது வீசப்பட்டதில் மரணம் அடைந்தார். இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார். பலத்த மழையின் போது, SYM போனஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் புரோட்டான் வீரா மற்றும் ஹோண்டா சிட்டி காருடன் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மரணம் அடைந்தார்.
அந்த பெண் சாலை சந்திப்பில் வலதுபுறம் வளைந்து தாமான் பெர்மாஸ் புத்ராவை நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது. புரோட்டோன் வீரா கார் மோட்டார் சைக்கிளோட்டியின் பின்னால் மோதியதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளோடி சாலையின் எதிரே விழுந்ததால் அவரை ஹோன்டா சிட்டி கார் மோதியதாக வான் அஸாருடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.