
ஷா ஆலம், ஆகஸ்ட் 29 – சபாக் பெர்னாமிலுள்ள பள்ளி விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் மூன்றாம் படிவ மாணவரின் வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவ 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ’ஸ்ரீ அமிருதின் ஷாரி (Datuk Seri Amirudin Shari) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் என்றும்,அவரின் அடையாளத்தை இதுவரை போலீசார் வெளியிடவில்லை என்றும் அறியப்படுகின்றது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த மாணவரின் நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து பெறுமாறு சுங்கை ஏர் தவார் மாநில உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலை (Datuk Rizam Ismail) அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை சந்தித்து, மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும், முழுமையான விசாரணை நடைபெற மாநில அரசு உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துள்ளது.
மேலும், பொது சுகாதார நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் (Jamaliah Jamaluddin), சம்பவத்துடன் தொடர்பான மருத்துவ முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையிடமிருந்து பெறுவார் என்றும் அறியப்படுகின்றது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு, 15 வயதான அகமது இர்பான் அகமது ஹனாஃபி (Ahmad Irfan Ahmad Hanafi) தற்போது சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.