
கோலாலம்பூர், செப்டம்பர்-1 – இன்றும் மலேசியா உறுதியாக நிற்பதற்கு காரணம் பல இன மக்களின் தியாகமும் ஒற்றுமையும் தான் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
சுதந்திரம் என்பது வெறும் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமையை காக்கும் பொறுப்பு, முன்னேற்றத்தை உருவாக்கும் கடமை, மற்றும் நாட்டின் சுயாட்சியை பாதுகாக்கும் தார்மீகப் பணி என அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரின் பங்களிப்பு மலேசியாவின் வலிமைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
அந்த ஒற்றுமை உணர்வை நாம் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால், உலகளாவிய சவால்களை மலேசியா நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.
மக்கள் அனைவரும் தேசபக்தியுடன் இணைந்து, பொருளாதார முன்னேற்றத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் எனவும்…இது தான் உண்மையான மலேசியா மடானி முகம் என்றும் அவர் கூறினார்.