
கோலாலம்பூர், ஜன 16 – புதன்கிழமையன்று சரவா , ஸ்ரீ அமானில் உள்ள தங்களது வீட்டில் தலைமையாசிரியரும் அவரது மனைவியும் கூர்மையான பொருளினால் குத்தப்பட்டதால் இறந்து கிடந்ததாக சரவா போலீஸ் ஆணையர் முகமட் ஜைனால் அப்துல்லா(Mohamad Zainal Abdullah ) தெரிவித்தார்.
மரணம் அடைந்த ஆடவரின் கழுத்து மற்றும் நெஞ்சில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாக சரவா பொது மருத்துவமனையின் தடயயியல் பிரிவு மேற்கொண்ட உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கழுத்து மற்றும் நெஞ்சில் ஆளமான கத்திக் குத்து காயங்களால் ஏற்பட்ட காயங்களே அவரது மரணத்திற்கு காரணமாகும்.
அந்த தலைமையாசிரியரின் மனைவியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவ பரிசோதனையில் அவருடைய நெஞ்சு மற்றும் கழுத்தில் இருந்த கத்திக் குத்து காயங்களே காரணம் என கண்டறியப்பட்டது.
அந்த இரு கொலைச் சம்பவம் தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் வேலை செய்பவர்கள் என 21 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதால் ஆருடங்கள் கூறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. கொலைசெய்யப்பட்ட 45 வயதுடைய ஆடவர் Lubok Antu லுள்ள ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகவும் , அவரது 44 வயது மனைவி தாதியாகவும் வேலை செய்துவந்தனர்.



