
நியா, சரவாக், டிசம்பர் 9 – சரவாக் ‘Niah’ பகுதியிலுள்ள Jalan Penerangan சாலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், காரின் மீது அமர்ந்து உயிர் தப்ப முயன்ற நான்கு ஆண்கள் தீயணைப்புதுறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அப்பகுதியில் திடீரென நீர் மட்டம் உயர்ந்து, சிலர் வாகனங்களிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கியிருப்பதாக அவசர அழைப்பு வந்ததென சராவாக் தீயணைப்பு துறை (JBPM) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர்கள் வலுவான நீர் ஓட்டத்திலிருந்து தப்பிக்க 4WD எனப்படும் நான்கு சக்கர வாகனத்தின் கூரையிலேயே இருந்தனர். இந்நிலையில், மீட்புக்குழுவினர், அவர்கள் அனைவரையும் படகில் ஏற்றி, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
தற்போது அனைவரும் நலமாக இருப்பதாகவும், மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளையும், அடிக்கடி வெள்ளம் ஏற்படும் சாலைகளையும் தவிர்க்கவும், குறிப்பாக இப்போது வானிலை மாறிக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றவும் JBPM அறிவுறுத்தியுள்ளது.



