
கங்கார், மார்ச்-27 – பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான facebook பதிவுத் தொடர்பில் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் கைதாகியுள்ளார்.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் சற்று முன்னர் அதனை உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில், இந்துக்களை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதற்காக சம்ரி கைதானதாக IGP சொன்னார்.
பெர்லிஸில் இன்று கைதுச் செய்யப்பட்ட சம்ரி, தற்போது பாடாங் பெசார் போலீஸ் தலைமையக லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட எதுவாக நாளை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
சம்ரி வினோத்தின் பதிவு இந்துக்களின் சமய நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி, டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து மலேசியத் தொடர்பு- பல்லூடக ஆணையம் சம்ரி வினோத்தின் facebook தரவை விசாரணைக்காகப் பாதுகாத்து வைத்துள்ளதோடு, அவரின் Vivo கைப்பேசியையும் பறிமுதல் செய்தது.
இம்மாதத் தொடக்கத்தில் ஏரா வானொலியின் ‘வேல் வேல்’ சர்ச்சை வெடித்த போதே சம்ரி சர்ச்சையைக்குரிய வகையில் பதிவிட்டு கண்டனங்களைப் பெற்றார்.
சுமார் 900 போலீஸ் புகார் செய்யப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என அதிருப்தி நிலவியது.
அந்தக் கோபம் அடங்குவதற்குள், மஸ்ஜித் இந்தியா ஆலய விவகாரத்திலும் அவர் மூக்கை நுழைத்தார்.
ஊரார் நிலத்தில் கோயிலைக் கட்டிவிட்டு, பிறகு நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுவதும், உரிமையாளரிடமே சண்டைக்கு நிற்பதும் வாடிக்கையாகி விட்டதாக, நக்கலாகவும், சிறுமைப்படுத்தியும் சம்ரி அடுத்தடுத்து facebook-கில் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.