
சிரம்பான், ஜூலை 18 – சிரம்பான் 2 கார்டன் அவென்யூ குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் இரண்டு குழந்தைகள் மேற்பார்வையின்றி இருக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விரைவு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை மீட்டனர்.
முன்னர் வெளிவந்த அந்த காணொளியில், அந்தச் சிறிய குழந்தை பால் புட்டியுடன், தனது 6 வயது அக்காவை கட்டியணைத்திருப்பதை காண முடிந்தது.
முதலில் பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளை அங்கு வேண்டுமென்றே விட்டு சென்றனர் என்று பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் வந்த வண்ணமாக இருந்தன.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு, பெற்றோர்கள் அவர்களை விட்டு செல்லவில்லை என்றும், தந்தை அசந்து தூங்கியிருந்த நேரம் பார்த்து தங்கையைக் கூட்டி கொண்டு அக்கா வெளியேறியதாக அறியப்படுகின்றது.
அந்தக் குழந்தைகள் தற்போது தங்கள் குடும்பத்துடன் இருப்பதாகவும், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹட்டா சே தின் கூறியுள்ளார்.
குழந்தைகள் தங்களின் தந்தையுடன் காவல் நிலையத்திலிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
இதனிடையே குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டுமென்றும் அவர்களின் பாதுகாப்பை எந்நிலையிலும் உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.