சிலாங்கூர் & இந்தோனேசிய ‘Persib’ அணி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதல் – சூழ்நிலையை கட்டுப்படுத்திய பாதுகாப்பு குழு

கோலாலம்பூர், நவம்பர் 7 – பெட்டாலிங் ஜெயா ஊராட்சி மன்ற மைதானத்தில் (Stadium MBPJ) நேற்றிரவு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் லீக் 2 (ACL2) காற்பந்து போட்டியில், சிலாங்கூர் மற்றும் இந்தோனேசிய ‘Persib’ அணி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தால் பெரும் குழப்பமான சூழல் உருவானது.
போட்டியின் நடுவில், ‘Persib’ அணியின் ஆதரவாளர்கள் எனப்படும் நபர்கள் மைதானத்தின் பக்கப்பகுதியில் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், பாதுகாப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு சூழ்நிலையை கட்டுப்படுத்தினர்.
போட்டி முடிந்ததும், சிலாங்கூர் அணி 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், சில ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தின் காணொளி, தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதுடன், இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
Gergasi Merah என்றழைக்கப்படும் சிலாங்கூர் அணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்களைச் சந்தித்து நிலைமை சரியாகும் வரையில் சிலாங்கூர் அணித் தலைவர் பைசால் ஹலீம் (Faisal Halim) அவர்களிடம் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.



