
கோலாலம்பூர், அக்டோபர்-4,
சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO, ஆண்டுதோறும் சுமார் RM421 மில்லியன் ரிங்கிட்டை, சீனி பயன்பாட்டால் உருவாகும் நோய்கள், குறிப்பாக நீரிழிவு நோய்க்கு செலவிடுவதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
இந்த அதிக செலவு காரணமாகத் தான், PERKESO, சுகாதார முன்னெச்சரிக்கையாக, வேலை நேரத்தையும் தாண்டி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க முன் வந்திருப்பதாக, உலக சமூக பாதுகாப்பு மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.
“சீனி மற்றும் நீரிழிவு, PERKESO-வுக்கு ஆண்டுதோறும் பெரும் சுமையைக் கொண்டுவருகிறது. விபத்துகள் அல்லது நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுக்க விரும்புகிறோம்” என்றார் அவர்.
இந்நிலையில், தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதையும், நீரிழிவை குறைக்கும் நோக்கில் “குறைந்த சீனி பயன்பாட்டு இயக்கம்” தொடங்கப்பட்டுள்ளதையும் ஸ்டீவன் சுட்டிக் காட்டினார்.
தனியார் காப்பீடு உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், மலேசியத் தொழிலாளர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கும் புதிய மசோதாவை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது