
செர்டாங், டிசம்பர்-30 – டிக் டோக்கில் நடந்த வணிக பரிவர்த்தனையில் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணால், துரித உணவக ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் மீதான விசாரணை அறிக்கை, அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
செர்டாங் போலீஸ் தலைவர் Muhamad Farid Ahmad அதனை உறுதிப்படுத்தினார்.
சந்தேக நபர் ஜனவரி 8-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.
அம்மாது தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், நாடு திரும்பிய பின் குற்றம் சாட்டப்படும் என்றும் Farid தெரிவித்தனர்.
இச்சம்பவம் டிசம்பர் 8-ஆம் தேதி செர்டாங் ராயாவில் நிகழ்ந்தது.
அப்போது உணவத்தில் வேலை செய்துகொண்டிருந்த 45 வயது பெண் பணியாளரை திடீரென 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் நெருங்கினர்.
அதில், டிக் டோக் வழியாக அறிமுகமான 40 வயது சந்தேக நபர், தனது முகத்தில் 5 முறை குத்தியதாகவும், இதனால் முகத்தில் வீக்கம் மற்றும் உதட்டில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அப்பெண் போலீஸில் புகாரளித்தார்.
இதையடுத்து அச்சம்பவத்தை குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரித்து, விசாரணை அறிக்கையை போலீஸ் நிறைவுச் செய்துள்ளது.



