
அமெரிக்கா, நவம்பர் 10 – அமெரிக்காவைச் சேர்ந்த Celestis நிறுவனம், 2030 ஆம் ஆண்டிற்குள் உயிரிழந்த மனிதர்களின் பிணத்தூள் மற்றும் அவர்களின் DNA மாதிரிகளை செவ்வாய் கிரகத்தில் அடக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மனித வரலாற்றில் இதுவரை 700 பேருக்கும் குறைவாகவே விண்வெளிக்கு சென்றுள்ளனர். அதனால், மலேசியாவின் அடுத்த விண்வெளி வீரராக ஆகும் வாய்ப்பே கடினம் என்றால், செவ்வாய் கிரகத்தை அடைவது அதைவிட இன்னும் அரிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Celestis நிறுவனம் துவங்கவுள்ள “Mars300” எனும் பணி மூலம், 300 பேரின் பிணத்தூள் மற்றும் DNA மாதிரிகளை 2030ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ளது.
இந்த சேவையில் பங்கேற்க விரும்புபவர்கள் 24,995 அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டும் என்றும், தற்போது அந்நிறுவனம் 10 சதவீத முன்பணத்தை மட்டுமே பெற்றுள்ளது என்பதனைக் குறிப்பிட்டுள்ளது.
சிலர் இந்த திட்டம் சாத்தியமில்லை என்று நினைத்தாலும், Celestis நிறுவனம் 1994ஆம் ஆண்டிலிருந்து விண்வெளி அடக்க சேவையை வழங்கி வருகிறது. இதுவரை பலரின் பிணத்தூள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ‘Star Trek’ தொடரின் படைப்பாளர் ஜீன் ரோடன்பெர்ரி (Gene Rodenberry) யின் பிணத்தூளும், கடந்த 1997ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



