கோலாலம்பூர், செப்டம்பர் 29 – வழிபாடு மட்டும் செய்கின்ற ஒரு மதம் என்றில்லாமல், மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் செம்மைப் படுத்திய ஒரு வாழ்க்கை நெறியாக இருந்து வருகிறது சைவ சமயம்.
அதன் நோக்கத்தையும் பரந்த சிந்தனையையும் மக்களுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தருமபுரம் ஆதீனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதரவில், உலக சைவ நன்னெறி மாநாடு ஒளிர்ந்தது.
சைவ சமயத்தின் அடிப்படை கருத்துகளை இந்தியர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது என்றார் டான் ஸ்ரீ ஆர். நடராஜா.
அவ்வகையில், மலையகத்திலும் பக்தி மணம் கமழ வேண்டும் என்ற நோக்கில் உலக சைவ மாநாட்டிற்கு தலைமை தாங்கிய தருமபுரம் ஆதினத்தின் 27ஆவது மடாதிபதிக்கு அவர் நன்றி பாராட்டினார்.
நேற்று பத்துமலை அருள்மிகு வேலாயுத சுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில், தருமபுர ஆதீனத்தினத்தின் 27ஆவது மடாதிபதி சுவாமி எழுந்தருளி, சமய சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசியுரை நல்கினர்.
இதில் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா அவர்களுக்கு ‘ஆதினம் ஆன்மிக அரப்பணி செம்மல்’ விருது, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய ம.இ.காவின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு ‘மக்கள் பணிச்செம்மல்’ விருது, தேவஸ்தானத்தின் அறங்காவலரும் டி.எஸ்.கே இயக்கத்தின் தலைவர் டத்தோ ந. சிவகுமார் அவர்களுக்கும் ‘சமயக் காவலர் விருது’ வழங்கி கொளரவிக்கப்பட்டது.
8 சைவ அன்பர்களுக்கு வழங்கப்பட்ட இவ்விருதுகள் யாவும் தொடர்ந்து தமிழுக்கும் சமயத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்கியுள்ளதாக டத்தோ ஸ்ரீ எம் சரவணன் கூறினார்.
சைவ நன்னெறி கழகத்தின் முதல் சைவ நன்னெறி மாநாடு மலேசியாவில், குறிப்பாக பத்துமலைத் திருத்தலத்தில் துவக்கம் கண்டு சிறப்போடு நடைபெற்றது குறித்து, இவ்வாறு வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார் தருமபுர ஆதினத்தின் 27ஆவது மடாதிபதி.
தமிழ்வழி வழிபாடு, திருமுறை வழிபாடு, பண்ணிசை உள்ளிட்ட சைவ சமய நன்னெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாடு குறித்து, பங்கேற்பாளர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விரைவில், இந்திய, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினத்தால் எழுப்படவுள்ள வைத்தியநாதர் சுவாமி பெயரிலான இலவச மருத்துவமனைக்கு, தேவஸ்தானம் மட்டுமின்றி சைவ அன்பர்களுடன் இணைந்து கணிசமான தொகையை வசூலித்து அன்பாளிப்பாக வழங்கும் என இம்மாநாட்டில் டான் ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
இந்திய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சைவ சமயக் குறவர்கள், சைவ சமய அறிஞர்கள், சமயவாதிகள் உட்பட, சிறார் முதல் பெரியோர்கள் வரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருளாசியோடு சமய அறிவையும் பெருக்கிக்கொண்டனர்.