
கோலாலம்பூர், டிச 29 – ஜனவரி 1 ஆம் தேதி முதல் மொத்தம் 150 நீதிபதிகள் சம்பள உயர்வை பெறவிருப்பதாக கடந்த வாரம்
அரசாங்க பதிவேடு தகவல் வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நீதிபதிகள் ஊதிய விதிமுறைகளின் கீழ் தலைமை நீதிபதியின் மாத சம்பளம் 46,800 ரிங்கிட்டாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரின் சம்பளம் 31,500 ரிங்கிட்டிலிருந்து 40,950 ரிங்கிட்டாக உயரும் என டிசம்பர் 24ஆம்தேதி வெளியிடப்பட்ட அரசாங்க பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டது.
மலாயா தலைமை நீதிபதி மற்றும் சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ஆகியோரின் சம்பளம் 39,650 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மலேசிய தலைமை நீதிபதிக்கு 30,500 ரிங்கிட்டாகவும் , அதே நேரத்தில் சபா மற்றும் சரவா தலைமை நீதிபதிக்கு 30,000 ரிங்கிட் ஊதியம் வழங்கப்பட்டது. கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் இப்போது 37,050 ரிங்கிட் சம்பளத்தையும் , மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 35,750 ரிங்கிட்டும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 34,450 ரிங்கிட் சம்பளத்தையும் பெறுவார்கள்.
ஒப்பந்தந்தின் கீழ் பதவி வகிக்கும் நீதித்துறை ஆணையர்கள் 33,150 ரிங்கிட் வருமானம் பெறுவார்கள். நீதிபதிகள் பெறும் மாதந்திர அலவன்ஸ்கள் மற்றும் பிற சலுகைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அனைத்து நீதிபதிகளும் 30 விழுக்காடு சம்பள உயர்வை பெறுவார்கள் என நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
நீதிபதிகளின் சம்பளம் ஆகக்கடைசியாக 2015 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.



