
நியூ யோர்க், நவம்பர்-5 – யூதர்களின் எதிரியாக அதிபர் டோனல்ட் ட்ரம்பால் சித்தரிக்கப்பட்ட ஜொஹ்ரான் மம்டானி, நியூ யோர்க் மாநகரின் முதல் இந்திய-அமெரிக்க முஸ்லீம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ (Andrew Cuom) உள்ளிட்ட வேட்பாளர்களைத் தோற்கடித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரபல இந்திய- அமெரிக்க படத் தயாரிப்பாளர் மீரா நாயரின் புதல்வருமான மம்டானி, நியூ யோர்க்கி மிக இள வயது மேயருமாவார்.
வெறும் 34 வயதில், மலிவு விலை வீடுகள், இலவச பொது போக்குவரத்து மற்றும் உலகளாவிய குழந்தை பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய மம்டானியின் முற்போக்கான கொள்கைகள், நியூ யோர்க் இளம் மற்றும் புலம்பெயர்ந்த வாக்காளர்களை பிரச்சாரங்களின் போதே உற்சாகப்படுத்தியது.
இதனால் அவரின் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகக் கூறப்பட்டன;
என்றாலும் மம்டானியை ‘யூத வெறுப்பாளர்’ என்றும் அவருக்கு வாக்களிக்கும் எந்த யூதரும் ‘ஒரு முட்டாள்’ என்றும் தேர்தல் நாளில், அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடினார்.
அதோடு, மம்டானிவெற்றிப் பெற்றால், நியூ யோர்க்கிற்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்படுமென்றும் அவர் மிரட்டியிருந்தார்.
எனினும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தமது கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்திய மம்டானி, இஸ்லாமிய வெறுப்பு தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்தார்.
உகாண்டாவில் பிறந்து, நியூ யோர்க்கில் வளர்ந்தவரான மம்டானியின் இவ்வெற்றி அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தில் பிரதிநிதித்துவம் மற்றும் அடிமட்ட அரசியலுக்கான ஒரு மைல்கல்லாகப் பாராட்டப்படுகிறது.
ஆனால், ட்ரம்புக்கும் மம்டானிக்குமான மோதல் இனி அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்பதையும் மறுப்பதற்கில்லை.



