
கோலாலம்பூர், அக்டோபர் -29 ,
தாய்லாந்தின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (FDA), ‘Hong Thai inhaler’ எனப்படுகின்ற பிரபல மூலிகை வாசனை நுகரி ஒன்று பாதுகாப்புத் தரத்திற்கு ஏற்ப இல்லை என்பதைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹாங் தாய் நிறுவனம் தயாரித்த ‘ஹாங் தாய்’ மூலிகை நுகரியின் மாதிரிகள், மருத்துவ அறிவியல் துறை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனையின் முடிவில், மூலிகை நுகரியின் தயாரிப்பில் நுண்ணுயிர் மாசு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்த ‘ஏரோபிக்’ நுண்ணுயிர் எண்ணிக்கை, ‘ஈஸ்ட்’ மற்றும் பூஞ்சை எண்ணிக்கை ஆகியவைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாயிருந்ததுடன், அரிய வகை பாக்டீரியாக்களும் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இந்த மூலிகை நுகரியை வாங்கும்போதும் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டுமென்று தாய்லாந்து FDA அறிவுறுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.



