
கோலாலம்பூர், ஜூலை 28 – புக்கிட் லெடாங்கிலுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் பேத்தியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தன்று எந்த சிசிடிவி காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் வெறும் 24 மணிநேர காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
திருடர்கள் போலீசாரிடம் பிடிபடுவதைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களால் எடுக்கப்பட்ட சதித்திட்டம்தான் இது என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.
1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் திருடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இந்தச் சதித்திட்டம் நடந்திருக்கலாம் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், போலீசார் திருடர்களின் கட்டைவிரல் ரேகைகள் போன்ற பிற ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர் என்றும் பகுப்பாய்வு செய்வதற்கு தடயவியல் குழுவினருக்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் விளக்கமளித்துள்ளார்.