
ஜோகூர் பாரு, ஜூலை 25 – நேற்று, கெலாங் பாத்தா அருகே உள்ள தஞ்சோங் குபாங்கிலிருக்கும் துவாஸ் இரண்டாவது இணைப்பு பாலத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த லாரி ஒன்றின் இரசாயன தொட்டி திடீரென கவிழ்ந்து கடலில் விழுந்தது.
அப்பாலத்தில் ‘புரோப்பிலீன் கிளைகோல்’ ( propylene glycol) மற்றும் ‘சோடியம் ஹைபோகுளோரைட்’ (sodium hypochlorite) எனும் இராசயனங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த 2 லாரிகள் விபத்துக்குள்ளாகி, அதில் ஒரு லாரியின் டாங்கர் எதிர்பாரா வண்ணமாக கடலில் விழுவதை வைரல் காணொளியில் தெளிவாக காண முடிகிறது.
தகவல் அறிந்து உடனேயே, தீயணைப்பு விரைவு டெண்டர் (FRT) வாகனத்துடன் ஏழு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக இஸ்கண்டார் புத்ரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் ஃபைஸ் சுலைமான் (Mohd Faiz Suleiman) தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில், சம்பந்தப்பட்ட டேங்கரிலிருந்து எந்தவித இரசாயன கசிவுகளும் ஏற்படவில்லை என்றும் கடல் நீரிலும் மாசுபாடுகள் ஏதும் இல்லை என்பதையும் தீயணைப்பு குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.