தேசிய சேவை பயிற்சிக்கான காலத்தை நீட்டிக்கும்படி பயிற்சி பெற்றோர் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 22-இந்த ஆண்டு தேசிய சேவை பயிற்சியின் 3ஆவது திட்டத்தில் இரண்டாவது தொடரை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்கள் முன்வைத்த பல முக்கிய பரிந்துரைகளில் பயிற்சி காலத்தை நீட்டிப்பது பற்றிய பரிசீலனையும் அடங்கும்.
ராணுவ பாணியிலான அடிப்படையில் பயிற்சி நடவடிக்கைகளை வலுப்படுத்துவதோடு கூடுதலாக நடைமுறை செயல்பாடுகளையும் சேர்க்க பயிற்சியாளர்கள் பரிந்துரைத்ததாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
பயிற்சிக்குப் பிந்தைய கேள்வித்தாளின் கண்டுபிடிப்புகள் மூலம் இந்தப் பரிந்துரை பெறப்பட்டதாகவும், திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான பரிந்துரைகளைச் சமர்ப்பித்த 82.5 விழுக்காடு பயிற்சியாளர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
தர ரீதியாக, தொடர் 1 மற்றும் 2 இன் முன்னாள் மாணவர்களுடனான நேர்காணல்கள், பயிற்சியாளர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்திற்கான ஒரு உந்து சக்தியாக தேசிய சேவை பயிற்சியின் 3ஆவது திட்டம் செயல்படுகிறது என்பது உறுதிப்படுத்தியுள்ளது.
பயிற்சியில் பங்கேற்றவர்கள் காட்டிய கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, ஒன்றுமை உணர்வு மற்றும் குடிமை உணர்வுகளின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த உருமாற்றம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆக்கப்பூர்வமான நிர்வாகம் மற்றும் நாட்டின் நடப்பு விவகாரம் குறித்து ஆழமான புரிந்துணர்வையும் அவர்கள் பெற்றுள்ளதை அறிய முடிந்ததாக இன்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் பதிவிட்ட அறிக்கையில் முகமட் காலிட் தெரிவித்தார்.