
கோலாலம்பூர், நவ 19 – பள்ளிக்குச் செல்லாததற்காகக் கண்டிக்கப்பட்ட 17 வயது சிறுவன், தனது தந்தையின் முதுகு மற்றும் இடது கையில் கத்தியால் குத்தினான்.
நேற்று மாலை 6.10 மணியளவில் ஜாலான் கோம்பாக் 4 ஆவது மைலில் அவர்களது வீட்டில், மாணவனுக்கும் அவனது தந்தைக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.
தந்தை திட்டியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மாணவன் அவரை கத்தியால் தாக்கியதை வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் முகமட் லாசிம் உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு இந்த விவகாரம் குற்றவியல் சட்டத்தின் 324 ஆவது மற்றும் 506 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் லாஷிம் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.



