
கோலாத் திரெங்கானு , ஜன 16 -பணமோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, போலீஸ் அதிகாரியாகக் காட்டிக் கொண்ட தொலைபேசி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட ஒரு தொழிலதிபர் கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
64 வயதான அந்த நபருக்கு பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரி மற்றும் அரசாங்கத் துணை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு கும்பலைச் சேர்ந்த உறுப்பினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு உள்ளாதாக திரெங்கானு போலீஸ் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் ( Mohd Khairi Khairudin ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதால் அதற்கு தீர்வுகாண்பதற்கு தனது வங்கிக் கணக்கில் RM2,707,965 ( 27 லட்சத்து 7,965 ரிங்கிட் மட்டுமே ) இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம்வரை ஐந்து மாத காலத்திற்கு, சந்தேக நபர் கொடுத்த கணக்கு எண்ணைத் தவிர வேறு வங்கிக் கணக்குகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் செய்ய பாதிக்கப்பட்டவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வழக்கைத் தீர்ப்பதற்காக சந்தேக நபர் கொடுத்த வங்கிக் கணக்கில் பாதிக்கப்பட்டவர் 55 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்க வைப்புத்தொகைகளைச் செய்துள்ளார்.
அனைத்து பரிவர்த்தனைகளும் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவே செய்யப்பட்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தனது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.
தாம் மோசடிக்கு உள்ளானதாக தெரியவந்ததைத் தொடர்ந்து இது குறித்து பாதிக்கப்பட்டவர் நேற்று கோலா தெரெங்கானு போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக முகமட் கைரி கூறினார்.



