கோலாலம்பூர், நவம்பர்-13 – மலேசியத் தொழில் நீதிமன்றத்திற்கு (MPM) மனிதவள அமைச்சு புதிதாக மூன்று தலைவர்களை நியமித்துள்ளது.
KPI எனப்படும் அமைச்சின் முதன்மை அடைவுநிலைக் குறியீட்டை அடையும் நோக்கில் தொழில் சட்டத்தில் பரந்த அனுபவம் பெற்ற ஜெயசீலன் அந்தோணி, வனிதாமணி சிவலிங்கம், அருண் குமார் கணேசன் ஆகிய மூவர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கான பதவி நியமனக் கடிதங்களை அமைச்சர் ஸ்டீவன் சிம் எடுத்து வழங்கினார்.
மேற்கண்ட மூவரில், 45 வயது அருண் குமாரின் நியமனம் தொழில் நீதிமன்றத்தின் அண்மையை கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொழில் நீதிமன்றத்தின் தலைவராக இத்தனை இளம் வயதில் பொறுப்பேற்றவராக அவர் பெயர் பதித்துள்ளார்.
இதற்கு முன் 2007-ஆம் ஆண்டு Tan Sri Ahmad Terrirudin Mohd Salleh வெறும் 39 வயதில் தொழில் நீதிமன்றத் தலைவராகப் பொறுப்பேற்று சாதனைப் படைத்திருந்தார்.
தொழில் நீதிமன்ற தலைமைத்துவத்தில் நடந்துள்ள தலைமுறை மாற்றத்தை இது குறிக்கிறது.
இப்படி இளைய இரத்தம் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் கூட்டுத் தலைமைத்துவத்தின் வாயிலாக, தொழில் நீதிமன்ற வழக்குகளை மேலும் விரைவாகவும் ஆக்ககரமாகவும் முடிக்க முடியுமென ஸ்டீவன் சிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முதலாளிகள், தொழிலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களை உட்படுத்திய பிரச்சனைகளுக்கும் வழக்குகளுக்கும் தீர்வு காண ஏதுவாக, 1967-ஆம் ஆண்டு தொழில் உறவுச் சட்டடத்தின் கீழ் நாட்டில் தொழில் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.