
வாஷிங்டன், செப்டம்பர்-3 – தாம் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது உட்பட தமது உடல் நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகளே என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தோன்றி ட்ரம்ப் அவ்வாறு கூறினார்.
சதா ஏதாவது வீடியோ வெளியிட்டோ அல்லது செய்தியாளர்களைச் சந்தித்தோ பரபரப்பைக் கிளப்புவதை வாடிக்கையாகக் கொண்டவரான ட்ரம்ப், கடந்த வாரம் பொது வெளியில் தலை காட்டாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
80 வயதைத் தொடும் நிலையிலிருக்கும் ட்ரம்ப் கைகளில் காயத்தோடும் கணுக்கால் வீக்கத்தோடும் காணப்பட்ட புகைப்படங்கள் அண்மையில் பரவியிருந்தன.
இதனால் அவரின் உடல்நலத்திற்கு ஏதோ பெரியப் பிரச்னை என அரசல் புரசலாகவே பேசப்பட்டு வந்தது.
இதையெல்லாம் வைத்துதான், அவர் இறந்திருக்கக் கூடுமென்றும், வெள்ளை மாளிகை அதனை மறைப்பதாகவும் சமூக ஊடகங்களில் பரபரப்பு கிளம்பியது.
எனினும் மக்கள் முன் தோன்றி அனைத்து வதந்திகளுக்கும் ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.