
கோலாலம்பூர், ஜனவரி-16 – 7 நாட்களுக்குள் நிலத்தை காலி செய்யுமாறு ஜேக்கல் ட்ரேடிங் அனுப்பிய வழக்கறிஞர் கடிதத்தால், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளது.
ஜேக்கல் நிறுவன அதிகாரிகளை, பொருளாளர் கிருஷ்ண பிரபு தலைமையில் ஆலய நிர்வாகத்தினர் நேற்று நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் வழங்கினர்.
அதில், நிலத்தை உடனடியாக காலி செய்யக் கோரும் உத்தரவு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுதிமொழியை முற்றிலும் மீறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
2025 மார்ச் 25‑ஆம் தேதி, அப்போதைய கூட்டரசு பிரதேச அமைச்சரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில், புதிய இடம் முழுமையாக தயார் ஆகும் வரை கோவில் மாற்றப்படாது என அரசாங்கம் உறுதி அளித்திருந்தது.
இதையடுத்து, 2025 ஏப்ரல் முதல், கோவில் நிர்வாகம் DBKL, போலீஸ் மற்றும் JKR உட்பட பல துறைகளுடன் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு, அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியது.
ஆனால், கோவிலுக்கான புதிய நிலம் 2025 டிசம்பர் 10‑ஆம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அரசுப் பதிவேட்டில் இடம்பெற்றது.
இதனால் ஜனவரி 15‑ஆம் தேதியான நேற்று தான் நிலம் பயன்படுத்தப்படத் தயாராகியுள்ளது.
ஆக கோயில் தரப்பில் எந்தவித தாமதமும் நிகழவில்லை என்பது உறுதியாகியுள்ளது..
இது தவிர, ஜேக்கேல் பெற்றதாகக் கூறப்படும் மேம்பாடு மற்றும் கட்டட அங்கீகாரங்கள், அரசாங்கத்தின் பகிரங்க உறுதிமொழியை மீறும் என்பதால் அவை செல்லாது என கோவில் நிர்வாகம் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்நிலையில், நல்லெண்ணத்தில் ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்க ஜேக்கல் முன்வந்துள்ளது நன்றிக்குரியது என்றாலும், எந்த நிபந்தனையுடனும் அந்நிதியை ஏற்க முடியாது என கோவில் தெளிவுப்படுத்தியது.
எது எப்படி இருந்தாலும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்ல புரிந்துணர்வின் மூலம் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதை தாங்கள் திடமாக நம்புவதாகவும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.



