
வாஷிங்டன், நவம்பர்-2,
கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையை கட்டுப்படுத்தாவிட்டால் நைஜீரியாவில் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் மறுபெயரிடப்பட்ட போர்த் துறைக்கு ‘சாத்தியமான நடவடிக்கைக்குத் தயாராகுங்கள்’ என்றும் அவர் அறிவுறுத்தினார்.
‘நைஜீரிய அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொல்ல அனுமதித்தால்’ அந்த ஆப்பிரிக்க நாட்டுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா உடனடியாகத் துண்டித்துவிடும் என்றும், தனது சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப் மிரட்டினார்.
“இந்த அட்டூழியங்களைச் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்க, அமெரிக்கப் படைகள் நைஜீரியாவுக்குள் நுழையுமென்றும் ‘துப்பாக்கிச் சத்தங்கள் அலறும்’ என்றும் ட்ரம்ப் கூறினார்.
ஆனால், எந்தக் குழுக்கள் அல்லது என்ன அட்டூழியங்கள் என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.
ட்ரம்ப்பின் எச்சரிக்கைக் குறித்து நைஜீரிய அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை.
நைஜீரியாவில் நிகழும் வன்முறை மோதல்கள் “கிறிஸ்தவ இனப்படுகொலை” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என, அண்மையக் காலமாகவே வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமெரிக்காவின் பிற முக்கியப் புள்ளிகளும் கூறி வருகின்றனர்.
Boko Haram மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் கொடிய தாக்குதல்களைச் சந்தித்த நாட்டில், அமைதியின்மையை நிவர்த்தி செய்ய நைஜீரிய அரசாங்கம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
ஆனால், நடக்கும் வன்முறைகளை “கிறிஸ்தவ இனப்படுகொலை” எனக் கூறுவதெலாம் மிகையான ஒன்றென பார்வையாளர்கள் கருதுகின்றனர்.



