
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – அடுக்கக வீட்டை போதைப் பொருள் கிடங்காவும் போதைப் பொருளை விநியோகிப்பதற்கு கொண்டுச் செல்லும் வாகனத்தின் அமைப்பை உருமாற்றம் செய்த கும்பலை போலீசார் முறியடித்தனர்.
கோலாலம்பூர் மற்றும் மலாக்காவில் கடந்த வாரம் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இது அம்பலத்திற்கு வந்தது. கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம் 4.23 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழிகள் சென்ற புரோடுவா மைவி காரில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் அடுக்ககம் ஒன்று போதைப் பொருள் வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. மேலும் மலாக்கா ஆயர் மோலேக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில உள்நாட்டு அடவர் கைது செய்யப்பட்டதோடு போதைப் பொருளுடன் Toyota Estima வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உசேய்ன் இத்தகவலை வெளியிட்டார்.