
பாசீர் பூத்தே, அக்டோபர் -29 ,
கடந்த செவ்வாய்க்கிழமை, பாசிர் பூத்தே கம்போங் கூலிம் பகுதியில் பழைய பகையின் காரணமாக, தனது வளர்ப்பு மாமாவால் தாக்கப்பட்ட ஆடவர் ஒருவர் படுங்காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
அந்த 55 வயதான சந்தேகநபர், 44 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்து அவரைப் பலமுறை பாரங்கத்தியால் தாக்கியதாக பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden சைசுல் ரிஸால் ஜகரியா (Superintenden Zaizul Rizal Zakaria) தெரிவித்தார்.
தொடக்க விசாரணையில், இந்தத் தாக்குதல் பழைய பகை மற்றும் நீண்டநாள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடந்தது எனவும் சந்தேகநபர், பாதிக்கப்பட்டவரின் தாயின் வளர்ப்பு சகோதரர் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றவுடனேயே போலீசார் விரைந்துச் சென்று தப்பிச் சென்ற சந்தேக நபரை, சில மணி நேரங்களுக்கு பின்பு அவரது வீட்டிலேயே கைது செய்தனர்.
காயமடைந்தவர் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் புதன்கிழமை முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு போலீஸ் தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.



