
பாசிர் மாஸ், அக்டோபர் 28 –
பாசிர் மாஸ் நகை அடகு கடை மேலாளர் மற்றும் அவரது காதலன், சுமார் 5.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாசிர் மாஸ் நகரில் உள்ள அடகு கடையில் திடீரென நுழைந்து ஆடவன், கிருமிநாசினி திரவத்தைத் தெளித்து, வாடிக்கையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 10.9 கிலோ நகைகளை பத்திரப் பெட்டியிலிருந்து திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய சோதனைகளில், நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு காவலர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், கோத்தா பாருவில் நடந்த சோதனையில், 933 பிளாஸ்டிக் பைகளில் இருந்த திருடபோன அனைத்து நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.
இந்தக் கொள்ளையை கடை மேலாளர் மற்றும் அவரது காதலன் இணைந்து திட்டமிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் மேலாளர் கடந்த 17 ஆண்டுகளாக அக்கடையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனைத்து சந்தேகநபர்களும் வருகின்ற வியாழன் வரை காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.



