
ஜெருசலம், செப்டம்பர்-12 – பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு கிடையவே கிடையாது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“பாலஸ்தீன அரசே இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறோம். இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது” என்றார் அவர்.
மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் அவர் அவ்வாறு சூளுரைத்தார்.
சுமார் 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான E1 எனப்படும் நிலப்பகுதியில் அக்குடியேற்றத்தைக் கட்டமைப்பதற்கான திட்டத்தை இஸ்ரேல் நீண்ட காலமாக முன்னெடுத்து வந்தாலும், அனைத்துலக எதிர்ப்புகளால் அது பல ஆண்டுகளாக நின்றுவிட்டது.
தற்போது அங்கு 3,400 வீடுகளைக் கட்டும் திட்டத்தோடு இந்தக் குடியேற்றத்தை நெத்தன்யாஹு முடுக்கி விட்டுள்ளார்.
இவ்வேளையில், இஸ்ரேலின் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒருமித்த குரலில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
காசா மற்றும் இதர நாடுகளை இஷ்டத்துக்கு தாக்கி வரும் இஸ்ரேலின் கொட்டத்தை அடக்கியே தீர வேண்டுமென, பாலஸ்தீனர்களின் உரிமைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான அன்வார் சொன்னார்.
ஒற்றை நாட்டின் கர்வத்தால் உலகமே அல்லல்படுவதாக அவர் சாடினார்.
ஏற்கனவே காசாவை உருக்குலையச் செய்துள்ள இஸ்ரேலிய இராணுவம் இவ்வாரத் தொடக்கத்தில் கட்டார் நாட்டில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.