
கோத்தா பாரு, அக்டோபர்- 7,
புகைப்பிடிப்பவர்களுக்கு வசதியாக லைட்டர் தொங்கவிட்டிருந்த சுல்தான் முகமட் IV விளையாட்டரங்க வளாகத்திலுள்ள உணவுக் கடை ஒன்றின் வர்த்தகருக்கு கிளந்தான் சுகாதாரத்துறை 250 ரிங்கிட் அபராதம் விதித்தது. நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அபராதத்திற்கான குற்றப்பதிவு அவருக்கு விநியோகிக்கப்பட்டது. மற்றவர்கள் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வது, அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் 18 ஆவது விதி (1) மற்றும் (b) யின் கீழ் 42 வயதுடைய அந்த ஆடவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது .
புகைப்பிடிப்பவர்களுக்காக லைட்டரை கட்டி தொங்கவிருவது ஒரு குற்றம் என்று தமக்கு தெரியவில்லையென அந்த வர்த்தகர் கூறிக்கொண்டார். உணவகத்தில் புகைப்பிடிப்பது மற்றும் சிகரெட் விற்பனை செய்வதுதான் குற்றம் என தாம் நினைத்ததாகவும் ஆனால் புகைப்பிடிப்பதற்கான லைட்டரை ஏற்பாடு செய்யும் வகையில் அதனை தொங்க விடுவது ஒரு குற்றம் என்பதை தாம் அறியவில்லையென அந்த வர்த்தகர் தெரிவித்தார். இதனிடையே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புகைப்பிடிக்கும் தயாரிப்பு பொருள் சட்டத்தின் கீழ் பொதுமக்களின் சுகாதார நலனுக்கான 2024ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 11,784 குற்றப் பதிவுகளை கிளந்தான் சுகாதாரத்துறை விநியோகித்திருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி உசேய்ன்
( Zaini Hussein ) தெரிவித்தார்.