கோலாலம்பூர், டிசம்பர்-9, தலைநகர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ச்சங்காட்டில் 9 கேளிக்கை மையங்களிலும் 7 ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வெளிநாட்டவர்கள் உட்பட 110 பேர் கைதாகினர்.
நேற்று அதிகாலை 2 மணிக்குத் தொடங்கி 4 மணி நேரங்கள் வரை சோதனை நீடித்ததாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர்
டத்தோ ருஸ்டி மொஹமட் இசா (Datuk Rusdi Mohd Isa) தெரிவித்தார்.
கேளிக்கை மையங்கள் என்ற போர்வையில் நடக்கும் விபச்சாரங்களை முறியடிக்கும் நோக்கில், போலீஸ், குடிநுழைவுத் துறை, DBKL, கூட்டரசு இஸ்லாமிய சமயத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 260 அதிகாரிகள் சோதனையில் பங்கேற்றனர்.
மொத்தப் பேரில், விபச்சாரம் தொடர்பில் 12 பெண்கள் உட்பட 41 பேர் வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
போலி பயணப் பத்திரம் மற்றும் வேலை பெர்மிட்டை உட்படுத்திய விதி மீறலுக்காக 36 பேரை குடிநுழைவுத் துறையும், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது, மதுபானம் குடித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 33 பேரை JAWI-யும் கைதுச் செய்தன.
வணிக உரிமங்களைத் தவறாகப் பயன்படுத்தி இது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிரான சோதனைகள் தொடருமென டத்தோ ருஸ்டி எச்சரித்தார்.