
கோலாலாம்பூர், டிசம்பர் 16-அமைச்சரவை மாற்றத்தில், புதிய மனிதவள அமைச்சராக தமக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்காகவும் நம்பிக்கைக்காகவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இந்தியச் சமூகத்தின் சார்பில் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த முழு அமைச்சர் பதவியானது, மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப, நாட்டின் ஆள்பலத் துறையின் மேம்பாட்டை வலுப்படுத்தவும், அரவணைக்கவும், போட்டித்தன்மையுடன் விளங்கச் செய்யவும் வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொறுப்பென அவர் வருணித்தார்.
இந்தியச் சமூகம் உட்பட மலேசியர்களின் நம்பிக்கைகளையும், நாட்டின் நம்பிக்கைகளையும் உறுதிச் செய்வதற்காக முழு அர்ப்பணிப்புடன் இந்தக் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
புதியப் பொறுப்பை ஏற்க ஏதுவாக, விரைவிலேயே KESUMA-வின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்துவேன் என்றார் அவர்.
இந்த சந்தர்ப்பத்தில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சரன KUSKOP மற்றும் அதன் அனைத்து பணியாளர்களுக்கும் அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
KUSKOP-ல் பணியாற்றிய கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில், இந்தியச் சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்த அனைத்து நிறுவனங்களும் தமக்கு வலுவான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் கைரி ஜமாலுடினைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தி, அன்வார் அமைச்சரவையில் துணையமைச்சரான இரண்டே ஆண்டுகளில் ரமணன் முழு அமைச்சராகி வரலாறு படைத்துள்ளார்.



