
கோலாலம்பூர், ஜூலை 28 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, பங்கேற்பாளர்களில் ஒரு சிலர் பிரதமரின் உருவச் சிலையை கொண்டு வந்த புகார் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையினர் (USJT) இந்த வழக்கை தேசத்துரோகச் சட்டம், தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் முகமது தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது தேசிய மசூதிக்கு அருகில் அச்சிலைகளை போலீசார் கண்டறிந்துள்ளதாகவும் வீடியோ காட்சி சாட்சிகளும் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கூட்டத்தின் போது தீவிரவாத துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து தனது தரப்பினருக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை என்றும் முகமது உசுப் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, டாத்தாரான் மெர்டேகாவில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 18,000 பேர் அமைதியாக கலந்து கொண்டுள்ளனர் என்று காவல்துறை அறிவித்துள்ளது.