
சென்னை, டிசம்பர்-9 – ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் நந்தினியின் தாக்கத்தில் உருவானதே படையப்பா படத்தின் ‘நீலாம்பரி’ கதாப்பாத்திரம் என, சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
வசீகரம், பழிவாங்கும் நோக்கம் என பன்முகம் கொண்ட அந்த ‘நந்தினி’ கதாப்பாத்திரம் தம்மை மிகவும் ஈர்த்ததால், அதனையே மையக் கருவாக வைத்து படையப்பாவும் நீலாம்பரியும் உருவானதாக அவர் சொன்னார்.
கர்வமே உருவான நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு முதலில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டும் என தாம் தீவிரமாக இருந்த இரகசியத்தையும் ரஜினி கூறினார்.
பின்னர் அரை மனதோடு தான் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரியாக நடிக்க வைத்ததாகவும், ஆனால் நீலாம்பரியாக ரம்யா பிரமிக்க வைத்ததாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
1999-ல் வெளியான இப்படம் படையப்பா – நீலாம்பரி என்ற இரு முதன்மை கதாபாத்திரங்களின் அனல் பறக்கும் மோதல் வசனங்களுக்குப் புகழ்பெற்றதாகும்.
படத்தில் நீலாம்பரியாக நடிக்காமல் ‘வாழ்ந்த’ ரம்யா கிருஷ்ணனை ஒட்டுமொத்த திரையுலகமே கொண்டாடியது.
ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் மோதும் காட்சிகள் திரையரங்களில் பட்டையைக் கிளப்பின; காலம் கடந்து இன்றளவும் ‘evergreen’ காட்சிகளாக அவை விளங்குகின்றன.
ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றான படையப்பா, 26 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு காண்பதை ஒட்டி, நேற்று வெளியிட்ட சிறப்பு வீடியோவில் அந்த சுவாரஷ்ய தகவலை அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்த படையப்பா என்ற பெயர் கூட ஏதோ ஏதேச்சையாக வந்ததாகவும் ஆனால் அது உண்மையில் முருகனின் பெயரான ஆறுபடையப்பாவைக் குறிப்பதாக பின்னர் தெரிய வந்து, அது தொடர்பான காட்சிகள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான படையப்பா, திரையுலகில் தனது 50-ஆவது பொன்விழா ஆண்டில் மறு வெளியீடு காண்பது சந்தோஷம் என்றும், இரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள் என்றும் அவர் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.



